மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்கப்படுகின்றனர். சிலர் தமக்கு அத்தகைய விளக்கமளிக்கும் அளவு தகுதி இல்லை எனக் கருதி என்னிடம் முறையிட்டு உள்ளனர். ஆக அத்தகைய சூழல்களில் , அதிகாரப்பூர்வமான, வெறும் கல்வி நோக்கில்லாத, முன்னுரை ஒன்று இந்து சமயத்திற்குத் தேவை என்பது தெளிவாகின்றது. இந்த பதிப்பகத்தார் பக்கத்தை ( இந்து சமயம் என்றால் என்ன? என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு) நமது நம்பிக்கையின் ஓர் அகண்ட சுருக்கமாகத் தயாரித்து உள்ளேன். இதிலிருந்து இந்து சமயத்தை அடிப்படை ரீதியில் மற்றவர்களுக்கு முறையாக எடுத்துச் சொல்ல உதவியாயிருக்கும். இதனால் பழங்கதைகளும் பொய்த்தகவல்களும் நீங்கிய ஓர் இந்து சமய அறிவு கிடைக்கும்.

நீங்கள் கூகல் தேடுதலில் ‘இந்து சமயம் என்றால் என்ன?’ என்று கேட்டால், ஏறக்குறைய 39,000 பதில்கள் கிடைக்கும். பெரும்பாலானவை அண்ணியர்களின் கைவரிசை; பெருவாரி எதிர்ப்பாளர்களின் தலைச்சிறந்த படைப்பாக இருக்கும். அறிவுப்பூர்வமானவை மிகக் குறைவு; அதிலும் குறைவு அதிகாரப்பூர்வமானவை. குறுகிய நோக்கு வழக்குச்சார்பு புரிந்துணர்வை கடந்த பதில்கள் அரிது. கேள்வியினால் தோன்றும் பரந்த அளவு சந்தேகத்தைத் தீர்க்கும் விடைகள் மிகப் பற்றாக்குறை. இந்தக் காரணங்களுக்காவே, இந்து சமயத்துக்கு ஓர் அறிமுகம் தவிர்க்கமுடியாதத் தேவையாகிவிட்டது.

இந்துஸ்ம் டுடே இதழின் நிறுவனராகிய சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள்(1927-2001), இன்றைய உலகின் அனைத்து மதங்களும், உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ, எதிர் நோக்கும் சவால்களை நன்கு புரிந்திருந்தார். ஒவ்வொரு மதமும் தனக்கு ஓர் ஆன்மீக நீதி நூல், மக்களின் சடங்கு , பாரம்பரிய முறைகள் கொண்டு – ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு வழங்கப்பட்டு- உயர்ந்த உணர்வு நிலைகளுடன் தொடர்பை நிலைநிறுத்தி, இதனால் மனிதனை கடவுளுடன் தொடர்பு படுத்தி, கலாச்சார பாரம்பரிய உச்ச முழுநிறைவை வாழ வைப்பதாக எழுதி வைத்துள்ளார். பாசத்தோடு குருதேவர் என்று அழைக்கப்பட்ட அவர், இந்த தொடர்பு ஒரு தலைமுறை தவறினாலும், ஒரு மதம் நிரந்தரமாகக் காணாமல்போய், தூசுபடிந்த வரலாற்று, அகழ்வாராய்ச்சி, மனித ஆராய்ச்சி நூலகங்களில் மக்கிப் போக விடப்படும் எனக் கண்டுள்ளார். தான் மனதார விரும்பிய மதத்தைக் காக்க அவர் கடும் சிரத்தை எடுத்துள்ளார். “ எங்கே போயின ஒரு காலத்தின் பாபிலோனிய, எகிப்திய, அஸ்டெக், மாயான், சிவப்பிந்திய அல்லது ஹவாயிய பிராதன சமயங்கள்?” என அவர் வேடிக்கையாகக் கேட்பதுண்டு. அவற்றின் மிகக் குறைவானதே எஞ்சியுள்ளது. சில காலங்களுக்கு முன்னர், உலக மக்கள் தொகையின் ஆறில் ஒரு பகுதியான மனித இனத்தின் மதம், பெரும்பாலும் இந்தியாவில் வாழ்பவர்களின் மதம், ஒரு பில்லியன் மக்கள் கொண்டாடும் இந்து சமயத்திற்கும் இதே கதிதான் என சிலரால் அஞ்சப்பட்டும், பலரால் எதிர்ப்பார்க்கவும் பட்டது. மத ரீதி ஆக்கிரமிப்பு மற்றும் முழுஅழிப்பு வரலாறு பழமையான பல மதங்களை துடைத்து ஒழித்த போதிலும் இந்து மதம் மட்டும் அதை எதிர்கொண்டு இன்னும் வாழ்ந்துக் கொண்டு இருப்பது தனித்துவமானது.

முரணாகவே, இந்தப் புனித மதம் 1000 ஆண்டுகளாக படையெடுப்புக்கள், சூறையாடல்கள், கண்மூடி ஆதிக்கம் ஆகியவற்றை அண்ணிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து எதிர்கொண்டு தாக்குப்பிடித்தாலும் 20 ஆம் நூற்றாண்டில் மதச்சார்பின்மை மற்றும் பொருள் உலக கவர்ச்சி போன்ற சூட்சுமமான சக்திகளை சந்திக்கத் தள்ளப்பட்டு உள்ளது. கிருஸ்துவ பிரச்சாரம், 16-வது நூற்றாண்டு இயேசுயிட் சமய பரப்பாளர்களால் திரித்துக் கூறப்பட்டு, 19-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இராஜாங்கத்தால் வலுவூட்டப்பட்டு, இன்றைய மேற்கத்திய மற்றும் இந்திய தகவல் சாதனங்களால் முன்னெடுக்கப்பட்டு, பல காலமாக மிகு வலிமிக்க அடிகள் அடிமையுண்டு கௌரவமில்லா ஓர் இந்து அடையாளத்தைக் கண்டுள்ளது. ஏனைய சுயமாண்பு நம்பிக்கையை தாழ்த்தி மிதித்தல், அதை மூடநம்பிக்கை மிக்க சடங்கு என தூற்றுதல், வெற்று உருவ வழிபாடு, தற்காலத்திற்கு ஒவ்வாத பழமை, பண்டைய வழக்கம், கணக்கில்லாத பொய்த் தெய்வங்கள் எனக் கூறுவதே ஒரு சாதாரண கிருஸ்துவ தந்திரம். இந்தியாவின் கமூனிஸ்ட்/மதச்சார்பற்ற ஊடகங்கள் ஜாதீய முறைகேடும், மோசமான சமுதாயச் சீரழிவுகளை வலியுறுத்தியும், இந்து என கூறும் எதனையும் அடிப்படைவாதம், தீவிரவாதம், வகுப்புவாதம் என முத்திரை குத்துகின்றன.

ஆனால், ஓர் எதிர்பாரா இந்து எழுச்சி பூமிப்பந்தின் எல்லா பாகங்களிலும் வெடித்துள்ளது கடந்த இருபது ஆண்டுகளில், சில வேளைகளில் இந்துக்களின் வேற்று நாடு குடியேற்றம், மற்றும் இந்தியாவின் புதிய கௌரவம் மற்றும் செல்வாக்கின் காரணமாக. தற்கால தலைமுறையினர் அதன் பொக்கிஷங்களை கண்டு உள்ளதாலும், அதன் காலத்திற்கேற்ற பயன்பாட்டை அறிந்ததாலும், இந்து மதம் 21 ஆம் நூற்றாண்டில் ஊக்கமுள்ள ஒரு சக்தியாக நுழைந்து உள்ளது. தனது தவறுகளைத் திருத்திக் கொண்டும், பலத்தை உற்சாகப்படுத்திக் கொண்டும், இந்து சமயம் டிஜிட்டல் (எண்ணியல்) உலகத்திற்குச் செல்கின்றது. தலைவர்கள் முன்னோக்கி அடி எடுக்கின்றனர். பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் இன்னும் சிறப்பாகச் செய்யவும், பலன்மிக்க வாழ்க்கை வாழவும் பெற்றோர்கள் தம் சமயத்தின் சிறந்ததை வழங்க முயற்சி செய்கின்றனர். ஆயிரக்கணக்கில் கோயில்கள் எழும்புகின்றன உலக அளவில். சமூகங்கள் தம் தெய்வ மூர்த்திகளை வைத்து, பாரிஸ், பெர்லின், டொரொன்டோ, சிட்னி ஆகியவற்றில் ஊர்வலம் வருகின்றனர்; இந்து திருவிழாக்களை பெரு அளவில் கொண்டாடுகின்றனர். அடுத்தவர்கள் தம்மை வித்தியாசமாக நினைப்பார்களோ அல்லது “பாகன்” என்பார்களோ என்ற கவலை இன்றி. மத வேற்றுமை இன்றி யோகா அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது. சொல்திறமிக்க பேச்சாளர்கள் ஒரு பில்லியன் இந்துக்களைப் பிரதிநிதித்து அனைத்துலக சமாதான மாநாடுகளிலும், சர்வமதக் கூட்டங்களிலும், இந்து உரிமை கலந்துரையாடல்களிலும் கலந்துக் கொள்கின்றனர். உயர்பள்ளிக்கூடம், பல்கலைக்கழக இந்து மாணவர்கள் திரும்பி தம் பாரம்பரியத்திற்குச் செல்கின்றனர். கோயில்களில் இருக்கும் தெய்வங்களை நாடுகின்றனர், தம் பெற்றோர் சொன்னதால் அல்லாமல், தம் உள்ளார்ந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தன் வாழ்க்கையை மேம்படுத்த, ஆத்மாவின் அழைப்பைப் பூர்த்தி செய்ய. இவ்வாறு எந்தக் கட்டத்திலும் நமது சமயத்தை விளக்கிக் கூற வேண்டின், கீழ் கண்டவற்றை வழங்குகின்றோம்.

பல நம்பிக்கைகள் ஒரே பெயரின் கீழ்

இந்து சமயத்திற்கு புதியவர்களுக்கு புதிராக இருப்பதன் முக்கியக் காரணம் அதன் பரந்ததன்மையே ஆகும். இந்து மதம் ஓர் ஒற்றைப் பாரம்பரியம் அல்ல. விஷயங்களில் ஒரே இந்துக் கருத்து என்ற ஒரு நிலை கிடையாது. ஆன்மீக சம்பந்தமான விஷயங்களை வரையறுக்க ஒற்றை அதிகாரப்பூர்வத் தலைவர் கிடையாது. சில வழக்குச்சார்பு பிரிவுகள் உள்ளன. அவற்றுள் நான்கு பெரியவை, வைணவம், சைவம், சாக்தம், ஸ்மார்த்தம். மேலும், கணக்கிடமுடியாத சம்பிரதாயங்கள் குருபாரம்பரியமாக வெளிப்படுத்தப் படுகின்றன. ஒவ்வொன்றும் முழுச் சுதந்திரத்துடன் அதிகாரத்தில் தன்னிறைவு கொண்டு உள்ளன. உண்மை வழக்கத்தில் கூறின், இந்த பெரும் மதத்தை பத்தாயிரம் சமயங்கள் சமாதானத்துடன், இந்து மதம் / சனாதன தர்மம் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்று கூடியதாக வரையறுத்தும் புரிந்தும் கொள்ளலாம். இந்த பரந்த பாங்கை நோக்கத் தவறுவது ஒட்டு மொத்த மதத்தையே தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்க எடுத்து வைக்கும் முதல் அடி, பொதுவாகவே. பெரும்பாலான ஆன்மீக பாரம்பரியங்கள் எளிதாக, ஒருங்கிணைக்கப் பட்டு, ஐயமின்றி இருக்கின்றன.

தொன்மை மட்டுமின்றி சிந்தனா அமைப்புக்கள், அழகுமிக்க கலை மற்றும் கட்டடமைப்பு, மக்களின் நெகிழ்வு ஆகிய ஆழமான கூறுகள் எல்லாம் இருந்தும் இந்து மதம் ஒரு புதிராகவே உள்ளது. திரிக்கப்பட்ட கருத்துக்கள் வழிந்தோடுவதால், செழிப்புமிக்க கட்டமைப்பு, நேர்த்தி, ஆன்மீக பரிசுகளை அள்ளித் தரும் இம்மதம் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஏதோ பாம்பாட்டி, மாட்டு வழிபாடு, ஆணி படுக்கை யோகிகளின் நையாண்டி சம்மேளனத்திற்கு சற்றே உயர்ந்த கீழான இடத்தில் வைத்தும் பார்க்கப்படுகின்றது.

நல்ல வேளையாக, சற்று சுலபமான, இயற்கையான வழி ஒன்று இந்து சமயத்தின் பரப்பை அறிய உள்ளது. ெதளிவான வழிகாட்டும் எண்ணிலடங்கா உயிர்வாழும் குருமார்கள், ஆசிரியர்கள், பண்டிதர்கள் மத்தியில் ஓர் ஆசான் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரின் போதனைகளைப் பயின்று, அவரின் சம்பிராதாயத்தைத் தழுவி, அந்த நீதி நெறிகளையும் ஒழுக்கத்தையும் மாணவன் ஏற்றுக் கொள்வதே அது. இவ்வாறே நடைமுறையில் மத நம்பிக்கை பேணப்படுகின்றது. புனித ஆண்களும் பெண்களும், லட்சக்கணக்கில் குருமார்களாகவும், மத பாதுகாவலர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களுக்கு தூண்டுகோலாகவும் இருக்கின்றனர்.

நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்

சுலபமான ஒரு ஒட்டுமொத்தப் பார்வையில் (மிக எளிமயாக இருப்பினும்) பெருவாரியான இந்துக்கள் நான்கு சார நம்பிக்கைகளை பகிர்ந்துக் கொள்கின்றனர்: கர்மம், மறுபிறவி, எங்கும் தங்கும் தெய்வீகம் மற்றும் தர்மம். இந்த நான்கு நம்பிக்கை கோட்பாட்டை பின்பற்றி வாழும் ஒருவரை நாம் இந்து என அழைக்க முடியும்.

கர்மம்: நேர்ப்பொருள் அடிப்படையில் கர்மம் “காரியம்” அல்லது “செயல்” என பொருள்படும். விளக்கமாகக் கூறின் அது காரண-காரிய பொதுக் கோட்பாடு, வினை-வினைப்பயன், எது அனைத்து தோற்றத்தையும் ஆளுகின்றதோ அது. மனதின் இயற்கை சட்டவிதியே கர்மம், எவ்வாறு புவியீர்ப்பு சக்தி பௌதீக சட்டவிதியாக உள்ளதோ அப்படி. கர்மம் விதி அல்ல, ஏனென்றால் மனிதன் சுய முயற்சியால் தனது அடைவுநிலையை உருவாக்குகின்றான். நல்லதை விதைத்தால் நல்லது கிடைக்கும். தீயதை விதைத்தால் தீயது கிடைக்கும் என வேதங்கள் சொல்கின்றன. கர்மம் நமது இந்த பிறவி மற்றும் கடந்த கால பிறவிகளிலும் ஒட்டு மொத்த செயல்களும் அவற்றினால் உருவான செயல்களையும் குறிக்கும், இதனால் நமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. நமது அனுபவமும், அதனை நாம் எதிர்நோக்கும் விதமும், கர்மம் அழிவு வேலையைச் செய்கின்றதா அல்லது உதவிக்கரம் நீட்டுகின்றதா என்பதை காட்டுகின்றது. கர்மத்தை வெற்றிக் கொள்ள அறிவார்ந்த செயல்களும் உணர்ச்சி வசப்படாத எதிர்ச் செயல்களும் தேவை. எல்லா வினைகளும் உடனே திரும்பி வருவதில்லை. சில சேமிக்கப்பட்டு, எதிர்பாராத வழிகளில் இந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ திரும்பி வரும். வேதங்கள் விளக்குகின்றன, “ ஒருவன் தான் செய்வது போலவே ஆகின்றான். நல்ல காரியத்தால் ஒருவன் நல்லவன் ஆகின்றான். தீயதனால் தீயவனாகின்றான்” (யஜுர் வேதம், பிரிஹதரன்யகா உபநிஷதம் 4.4.5).

மறுபிறவி: புனர்ஜன்மம் எனப்படும் மறுபிறவி, இயற்கையான பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறப்பு நடைமுறையாகும். இறப்பின் போது, நாம் இந்த பூத உடலை உதறிவிட்டு, சூக்கும உடல்களில் இருந்தவாறு, உள் உலகங்களில் தொடர்ந்து பரிணாமம் அடைகின்றோம், மீண்டும் ஒரு பிறப்புக்குள் நுழையும் முன். பல காலமாக, மறுபிறவி கோட்பாடு இந்துக்களிடையே மிகப்பெறும் ஆறுதல் கூறாக இருந்துள்ளது, சாவைப்பற்றிய பயத்தை நீக்கி. நாம் வாழும் உடல் அல்ல நாம், ஆனால் அனாதியான ஆத்மா, அது பரிணாம வளர்ச்சியில், சம்சாரத்தில் பல உடல்களில் வாழ்ந்துள்ளது. இறப்புக்குப் பின், பார்வைக்கு அகப்படாத உலகங்களில் நாம் தொடர்ந்து இருந்து, உலகத்தில் செய்த காரியங்களுக்கு சுகத்தையோ துக்கத்தையோ அனுபவித்து, மீண்டும் ஒரு பூதவுடல் கொண்ட பிறவிக்காக காத்திருப்போம். கடந்த பிறவிகளில் நாம் செய்த காரியங்கள் அடுத்தப் பிறவியின் நிலைமை மற்றும் மனப்பாங்குகளாக உருவாகின்றது. கர்மம் தீர்க்கப்பட்டதும், கடவுள் அறியப்பட்டதும், மோட்சம் அடையப்பட்டதும் விளைவாக மறுபிறவி நீங்குகின்றது. வேதங்கள் பகருகின்றன, “ இறப்புக்குப் பின், ஆத்மா அடுத்த உலகுக்கு செல்கின்றது. தான் செய்த காரியங்களின் நுட்ப பதிவுகளை மனதில் தாங்கியவாறு. அதற்கான பலன்களை அனுபவித்தப் பிறகு, காரிய உலகமான இங்கு மீண்டும் வருகின்றது. ஆக, இச்சை உள்ளவருக்கு மறுபிறவி வாய்க்க தொடர்ந்து வழி உண்டு” ( யஜுர்வேதம், பிரிஹதரன்யகா உபநிஷதம் 4.4.6).

எங்கும் தங்கும் தெய்வீகம்: பல சமய நம்பிக்கைகளின் குடும்பமாதலால், இந்து மதம் பலதரப்பட்ட கோணங்களில் தெய்வீகத்தைப் பார்க்க முனைகின்றது. இருப்பினும் எல்லா இந்துவும், அந்த ஒரு, எங்கும் தங்கியிருக்கும் உச்ச பொருள், எது உபநிக்ஷதங்களில் கூறப்பட்டு இருக்கின்றதோ, அதையே வணங்குகின்றனர். தீர்க்க உண்மைப் பொருளாக நோக்கின், கடவுள் தோற்றமின்றி, மாற்றமின்றி, கடந்த நிலையில், காலம் அகன்று, உருவம் அகன்று, இடம் அகன்று, தான் கடவுளாக உள்ளளார். பரிசுத்த உணர்வாக இருப்பதால், கடவுள் ஆதிமூல தோற்றப் பொருள், தூய அன்பு, மற்றும் ஒளியாகி, அனைத்துத் தோற்றங்களிலும் வழிந்தோடி, சர்வ காலங்களிலும், சர்வ இடங்களிலும் ஆதியந்தமில்லாத பேரறிவாளனாக, சக்தியாக நிற்கின்றார். மூல ஆத்மாவாதலால், கடவுள் நமது தனிப்பட்ட தெய்வமாகி, மூன்று உலகங்களின் ஆதாரமாகி, நம்மை காக்கும், வளர்க்கும், வழிகாட்டும் அப்பன் – அம்மை ஆகி உள்ளார். நம் வாழ்க்கையில் கடவுளின் அருளை வேண்டும் அதே வேளை, நாம் அவன்/அவள் நமது ஆத்மாவின் சாரம் என்பதையும், நமது உயிரின் உயிர் என்பதையும் அறிந்து உள்ளோம். ஒவ்வொரு வழக்குச்சார்பும், ஏனைய கடவுளர்களையும், அல்லது மகாதேவர்கள், கடவுளால் படைக்கப் பட்டு, அவருக்குப் பணி செய்து, வணங்குவதாக நம்புகின்றனர். வேதங்கள் அறிவிக்கின்றன, “எண்ணிலடங்கா தோற்றங்களை உடைய கடவுளாகிய அவனது மகிமையாலே அனைத்தும் நிலைக்கின்றன- அணுவிலும் சிறிதாகி, இருப்பினும் அனைத்துக்கும் படைப்பாளனாகி, தன் படைப்பில் என்றும் வாழ்கின்றான். அன்பாகிய இக்கடவுளைக் காண்பவர்க்கு நிலைத்த அமைதி உண்டு. அனைத்துக்கும் தலைவனாகிய அவன், அனைத்தின் மத்தியிலும் மறைந்திருக்கின்றான், கால உலகை கண்காணிக்கின்றான்” (கிருஷ்ண யஜுர் வேதம், ஸ்வேதஸ்வதர உபநிஷதம் 4.14-15).

தர்மம்: கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தபோது, அதற்கு ஒரு நெறியையும் , தோற்றத்தை ஆளுகின்ற சட்டங்களையும் வழங்கியுள்ளார்். தர்மம் என்பது கடவுளின் தெய்வீகச் சட்டம் தோற்றத்தின் அனைத்து மட்டத்திலும் காணப்படும், நிலைப்பெறச் செய்யும் பிரபஞ்ச நியதி முதல் சமய மற்றும் நன்னெறி விதிகள் வரை நம்மை பிணைத்து சுமூகமாக இருக்க வைக்கின்றது. ஆத்மாவின் தொடர்பில், தர்மம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிக தோதுவான நடத்தை, சீரான நன்னடத்தை. அது கடவுள் பற்று மற்றும் கோட்பாட்டு பயிற்சி, கடமை மற்றும் கட்டாயம். நாம் தர்மத்தை பின்பற்றுகையில், நாம் பிரபஞ்சத்தை பற்றியிருக்கின்ற, வழிகாட்டுகின்ற உண்மையுடன் ஒத்து வாழ்கின்றோம், ஆக இயற்கையிலேயே கடவுளுடன் நெருக்கத்தில் உள்ளோம். தெய்வீக சட்டத்துக்கு எதிரானது அதர்மம். ஒரு விதைக்கு வழக்கமான வளர்ச்சி எப்படியோ அது போலவே மனிதனுக்கு தர்மம் – இயற்புத் தன்மை மற்றும் குறிக்கோளைப் படிப்படியாக நிறைவேற்றுதல். திருக்குறள் (31-32) நினைவுறுத்துகின்றது, “வானுலகின் கீர்த்தியையும், மண்ணுலகின் செல்வத்தையும் தர்மம் வழங்குகின்றது. அதைவிட பயனுள்ள வேறு எது உள்ளது? தர்மத்தை விட பரிசளிக்கும் ஒன்றுமில்லை, அதை கண்டுகொள்ளாததை விட அழிவு வேறு இல்லை.”

இந்து மதத்தின் தனித்த மதிப்பு இன்னாளில்.

இந்துக்களும் இந்து அல்லாதவர்களும் இந்து மதத்தின் தன்மையை கற்று உணர நல்ல காரணங்கள் உள்ளன. பரந்த பூகோள மற்றும் கலாச்சாரக் கூறுகள் கண்டங்களையும், மக்களையும், மதங்களையும் பிரித்திருந்தாலும், வரவர அவற்றுக்கிடையில் உறவுகள் ஏற்பட்டு, உலகம் ஒன்றுடன் ஒன்று மேன்மேலும் நெருங்கி வருகின்றது. தொலைத்தொடர்ப்பு, இணையம், வியாபாரம், பயணங்கள் மற்றும் உலகளாவிய குடிமாற்றம் ஆகியன முன்னாளில் தூரமாயிருந்தவர்களை தற்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக்கி விட்டது, சிலவேளைகளில் விருப்பமில்லாமல்.

படிப்படியாக பன்மைப்பாங்கு பெருகிவரும் உலகில், ஒருவர் மற்றொருவருடன் சுமூகமாக இருக்க வேண்டுமாயின், பூமியின் மக்கள் தமது சக அண்டை சமூக மதங்கள், கலாச்சாரங்கள், கருத்துக்கள் மற்றும் கவலைகளை அறிந்து, பாரட்டுவது மிக முக்கியமாகிறது. இவ்விஷயத்தில், சனாதன தர்மம், தன்னுடைய மாண்புடைய சமரச போக்கினாலும், சர்வ வியாப கடவுள் கொள்கையினாலும் உலகத்திற்கு நிறையவே வழங்க முடியும். இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த ஒரு இடத்திலும், மதங்கள் நெருக்கமாகவும் சுமூகமாகவும் வாழ்ந்து வளர்ந்ததாகத் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லா முக்கிய மதங்களுக்கும் ஆயிரக்்கணக்கான ஆண்டுகளுக்கு, இந்தியா ஒரு வீடாக இருந்து இருக்கின்றது. யூதர்கள், பார்சி சமயத்தவர், சூஃபிகள், பௌத்தர்கள், கிருஸ்துவர்கள், நாத்திகர்கள் என பலருக்கு இந்தியா அடைக்கலம் வழங்கியுள்ளது. இன்று நூறு மில்லியனுக்கு மேல் இந்தியர்கள் முஸ்லீம்களாக இருக்கின்றனர், இதை பெரும்பான்மை இந்து சமூகத்தினர் பெருமனதுடன் ஏற்றுள்ளனர். இத்தகைய நட்புறவு, எல்லா தூய மதங்களுக்கும் வழங்கப்படும் உறைந்த மதிப்பின் காரணமாகவே நிகழ்கின்றது. இப்பழக்கம் “ ஏகம் சத் அனேகா பந்தா,” “உண்மை ஒன்றே, வழிகள்தான் வேறு.” என்ற வழக்கு வாசகத்தை மெய்ப்பிக்கின்றது. பௌத்தம், சீக்கியம், சமணம் போன்றவற்றை ஈன்று, ஏனைய மதங்களுக்கு தாராள பாதுகாப்பு கொடுக்கும், இந்து தேசத்திடம் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்? இந்தியாவின் அசல் சமயம் ஒரு கிடைக்கதற்கரிய கண்ணோட்டத்தையும் , அமைதி, பகுத்தறிவு, செயல்படுத்தவல்ல பாதையையும் கொடுத்து, நமது உலகை புரிந்து கொள்ளச் செய்கிறது. தனிப்பட்ட மனித ஆன்மீக உள்நோக்கு பெறவும், நமது சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கு உந்தும் உலகநோக்குக்கு ஓர் அரிச்சுவடியாகவும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்து மதம் தனது போதனைகளும் பயிற்சிகளும் காலத்தில் 8000 ஆண்டு மற்றும் அதற்கு மேல் வழக்கம் உடையதென பெருமை கொள்கின்றது. இந்த கால சரித்திரம் மற்ற பல மதங்களை குள்ளமாக்கின்றது. உண்மையில், இந்து மதம் தோன்றிய குறிப்பிட்ட காலம் சரித்திரத்தில் கிடையாது. காலம் தோன்றிய போதிலிருந்தே அது ஆரம்பித்ததாகக் கூறப்படுகின்றது. மற்ற மதங்களின் ஒப்பீட்டு வயதை அழுத்திச் சொல்லி, இந்து மதத்தின் தொன்மையை காட்டும்பட்சத்தில், ‘தி வேதிக் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற நூலின் ஆசிரியர், ரய்மன் பனிக்கர் மிக அறிவுப்பூர்வமாக, ஒவ்வொரு 100 ஆண்டுகால சரித்திரத்தை ஒரு மனித வாழ்க்கை ஆண்டாக பிரதிநிதிக்கிறார். இவ்வாறு பார்க்கின், சீக்கியம், மிக இளமையான மதம் ஐந்து வயது. இஸ்லாம் ஒரு பதின்மவயதினர், பதினான்கு வயது. கிருஸ்துவ மதம் இருபது வயது ஆகியுள்ளது.பௌத்தம், தாவேயிசம், சமணம் மற்றும் கான்பூசியனிசம் ஆகியவை இருபத்து ஐந்து வயது. சமணம் ஒரு வளர்ந்த முப்பத்து ஏழு வயது. இந்து மதமோ, பிறந்த தேதி தெரியாமல், குறைந்த பட்சம் எண்பது ஆண்டு வயது – இப்புவியின் ஆன்மீக வாழ்க்கையின் வெள்ளைத் தாடி தாத்தா.